முகப்பு துளசிதேவியின் மகிமை

PostHeaderIcon பஜகோவிந்தம் பிறந்த வரலாறு

 

உலகத்தில் பல அரிய நிகழ்வுகள் தோன்றிய சூழலைச் சிந்தித்தால் மிகவும் விசித்திரமாக இருக்கும். புவிஈர்ப்புத் தத்து வத்தைக் கண்டுபிடித்த சூழலும், ஆர்க்கி மிடிக்ஸ் தத்துவம் உருவான வரலாறும் நாம் அறிந்ததே. ஆனால், நம்மில் பலருக்கு பஜகோவிந்தம் உருவான வரலாறு தெரிந்திருக் குமா என்பது சந்தேகமே. தெரியாதவர்களுக்கு சற்றே விளக்குவோம்.

ராய்ச்சியாளர்களின் ஏகோபித்த கருத்தின்படி ஆதிசங்கரரின் காலம் கி.பி. 788-820. கேரள மாநிலத்தில் உள்ள காலடியில் பிறந்தார் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றனர். பகவான் புத்தரின் (கி.மு.6-ஆம் நூற்றாண்டு) காலத்திற் குப் பிறகு தோன்றிய மிகச்சிறந்த சிந்தனையாளரும் இவர்தான். இவை அனைத்துக்குமே முத்தாய்ப்பான செய்தி- இவரொரு தமிழர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட- வடமொழியின் எல்லை கண்ட மகாகவி இவர். இவ்வளவு உறுதியாகச் சொல்வதற்குக் காரணம் 8, 9-ஆம் நூற்றாண்டில் மலையாள மொழி தோன்றவே இல்லை. அதன் முதல் இலக்கியமான ராமாயணமே எழுத்தச்சனால் 10-ஆம் நூற்றாண்டில் உண்டானது தான்.

கங்கை நதிக்கரையில் காசி மாநகரில் பஜகோவிந்தம் உருவாகக் காரணமாக இருந்த நிகழ்ச்சி பூத்த காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கமாக இருக்கலாம். காசியில் ஆதிசங்கரர் சர்வக்ஞபீடம் ஏறிய பின்புகூட இருக்கலாம். தனது 32 வயதிற்குள் எண்ணற்ற இலக்கியங்கள் மற்றும் கவிப்பெருக்கால் தத்துவ உலகை பிரமிக்கச் செய்து, அத்வைத தத்துவத்தை ஸ்தாபித்து, மும்முறைக்கும் மேலாக அகண்ட பாரத தேசத்தை தனது திருப்பாதங்களால் புனிதப்படுத்திய ஞானப் பிரவாகமல்லவா அந்த மாமேதை!

ஒருநாள் வைகறைப் பொழுது... விரிகடலும் தோற்கும் வண்ணம் தெளிநீர்ப் பெருக்கால் காட்சியளித்துக் கொண்டிருந்தது கருணையே வடிவான கங்கை. அப்போது கிழக்கே  உதித்து வரும் செம்பருதியைப்போல- மனித வடிவம் கொண்டு வந்த தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப்போல ஆதிசங்கரர் தனது நான்கு சீடர்களும் நிழலெனத் தொடர கம்பீர மாய் நடந்து வந்து கொண்டிருந்தார்.

ஒருபுறம் வேத கோஷங்கள், நாத கீதங்கள், சேதமிலா நாதனைப் பற்றி வந்தனைகள், வாழ்த்தொலிகள், சொற்பொழிவுகள்; மற்றொரு புறம் தியாகத்தின் வெளியீடான யாகங்கள், உயிர்ப்பலியினை உதறித் தள்ளி இயற்றப்பட்ட ஞான வேள்விகள். பகவத் கீதையில் கிருஷ்ணனும் ஞான வேள்வியைத்தானே ஏற்றிப் போற்றுகிறான். மற்றொரு புறத்தே தாடியும் சடாமுடியுமாகக் கூத்தடித்த கபட சன்னியாசிகள், வேடதாரிகள். (இதை சங்கரரே பின்பு "ஜடிலே முன்டி லுஞ்சித கேஸ, காஷாயாம்பர' எனச் சாடினார்.) இதையெல்லாம் கண்டு சிந்தனையில் அசை போட்டுக் கொண்டே வந்தவர் ஒரு காட்சியைக் கண்டதும் பிரமித்து விட்டார்.

ஒரு மூலையில் வயதான கிழவன் கால்கள் தள்ளாட, கைக்கோலுடன் மல்லாடிக் கொண்டே ஒரு சுவடியின் சில பகுதிகளை மனப்பாடம் செய்வதில் திண்டாடிக் கொண்டிருந்தான். இன்றைக்கோ நாளைக்கோ காலனுக்கு விருந்தாகப் போகிறவன் கோலத்தைக் கண்டு துணுக்குற்ற சங்கரர் மெல்ல அவன்  அருகில் சென்றார். கிழவனும் சற்று உரக்கவேதான் படித்துக் கொண்டிருந்தான். மனப்பாடம் செய்து கொண்டிருந்தது, வடமொழி இலக்கணத்தில் வரும் சூத்திரத்தை. சங்கரர் முகத்தில் புன்னகை மலர்ந்தது. என்ன உலகம்! மோகத்தின் வேகத்தில் சாகும் உலகம். பெண் மேலே- பொன் மேலே- வெற்றுக் கல்வியின் மேலே மோகம் கொண்டு அழிகிறதே! பிறப்பறுக்கும் பெம்மானின் திருவருளைப் பெறுதலைவிட்டு, பந்தத்தின் மூலத்தை- பிறப்பிற்குக் காரணமானதை நாடுகிறதே... இந்த மூட மக்களுக்குப் போதித்துக் கரையேற்ற வேண்டாமா எனச் சிந்தித்து, "மோஹ முத்கரம்' (மோகத்தைத் தகர்க்கும் சம்மட்டி) என்ற இந்த ரத்தின மாலையைத் தொடுத்தார். ஆனால் இதன்  முதல் மலர், "பஜகோவிந்தம்' என்று தொடங்குவதால் அதற்கும் "பஜகோவிந்தம்' என்ற பெயரே நிலைப்பதாயிற்று.

அப்பாடல் இதோ!

"பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

கோவிந்தம் பஜ மூடமதே

ஸம்ப்ரஸ்தே சந்நிஹிதே காலே

நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே.'

இதைத் தமிழில்,

"மாயனை எண்ணின் மாயம் மாயும்

மாலை நினைவாய் அலை மனமே

நேயனை யன்றி மாயுங் காலம்

யாரும் வாரார் உளங்கொள்வாய்'

எனச் சொல்லலாம்.

"ஓ மூடனே! இறைவனுக்கு எப்பொழுதும் மனத்தாலும் வாக்காலும் உடலாலும் பணிபுரிவதை விட்டு, "டுக்குங்கரணே' போன்ற இலக்கணப் பாடல்களைப் பயில்கிறாயே. இதனால் பயனுண்டா? இறக்கும் காலத்தே சாகும் கல்வி உடன்வருமா? சாகா கல்வியைக் கற்றால்தானே விடுதலை கிடைக்கும்? ஆகவே மனது, சொல், உடல் அனைத்தும் இறைவன்பால் சாரட்டும். அதற்கு ஆவண செய்' என்பது இதன் பொருளாகும்.

பஜகோவிந்தம் மொத்தம் 31 கவிமலர்களில் கோக்கப் பெற்றது. இந்த ரத்தின மாலை கிடைக்கக் காரணமாக இருந்த அம் முதியவருக்கும் நம் வணக்கங்களைச் சமர்ப்பிப்போமே!

 

நன்றி: நக்கீரன்