முகப்பு ஹரே கிருஷ்ண மகா மந்திரம்

PostHeaderIcon ஹரே கிருஷ்ண மகா மந்திரம்

 

 

தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா வழங்கிய பொருளுரை

 

(அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் ஸ்தாபக ஆச்சாரியார்)

 

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்னும் மகா மந்திரத்தை ஜெபிக்கும் போது நிலை நிறுத்தப்படும் உன்னத ஒலி அதிர்வு எங்கள் கிருஷ்ண உணர்வுக்கு மறுமலர்ச்சியளிக்கும் ஒரு உயர்ந்த முறையாகும். உயிர்வாழ் ஆன்மீக ஆத்மாக்கள் என்ற வகையில் நாம் எல்லோரும் ஆதியில் கிருஷ்ண உணர்வு உடையவர்களே. ஆனால் நினைவுக்கு எட்டாத காலம் முதல் ஜடப்பொருட்களுடன் நாங்கள் கொண்ட தொடர்பால் எங்கள் உணர்வு ஜடச்சூழ்நிலையால் மாசுபடுத்தப்பட்டுள்ளது. நாம் தற்பொழுது வசிக்கும் ஜடச்சூழல் மாயை எனப்படும். மாயை என்பது இல்லாத ஒன்று என பொருள்படும். இந்த மாயை என்றால் என்ன? உண்மையில் இந்த ஜட இயல்பின் நிரந்தரமான விதியின் பிடியில் நாம் இருக்கின்ற அதே வேளையில் அதன் அதிபதிகளாக வர முயற்சிப்பதே மாயை ஆகும்.

ஒரு சேவகன் சகல அதிகாரங்களும் கொண்ட எஜமான் போன்று செயற்கையாக நடிக்க முயல்வதே மாயை எனப்படும். இந்தக்கறை படிந்த வாழ்க்கைக் கோட்பாட்டில் நாம் எல்லோரும் ஜட இயற்கையின் வழங்களை எமது சுயநலத்திற்காக பாவிக்கமுயல்கிறோம். ஆனால் உண்மையில் நாங்கள் அதன் சிக்கலில் மேலும் மேலும் சிக்கிக் கொள்கிறோம். ஆகவே நாங்கள் இயற்கையை வெல்வதற்கு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பினும் நாங்கள் எப்பொழுதும் அதிலேயே மேலும் தங்கி உள்ளோம். எங்கள் கிருஷ்ண உணர்வை மலரச்செய்வதன் மூலம் இந்த ஜடஇயற்கைக்கு எதிரான மாய போராட்டத்தை உடனடியாக நிறுத்த முடியும்.

கிருஷ்ண உணர்வு என்பது மனதில் செயற்கையாக சுமத்தப்படுவதல்ல. இந்த உணர்வு உயிர்வாழிகளின் மூலசக்தியாகும். இந்த உன்னத ஒலி அதிர்வை நாம் கேட்கும் போது, இந்த உணர்வு புத்துயிர் பெறுகிறது. இந்த யுகத்திற்கு இந்த முறையே வல்லுனர்களால் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. வழக்கமான அனுபவத்தின் மூலமும், இந்த மகாமந்திரத்தை அல்லது விடுதலைக்கான மகா ஜெபத்தை ஜெபிப்பதன் மூலம் ஒருவன் ஆன்மீகத்தளத்திலிருந்த ஒரு உண்மையான பரவசம் உண்டாவதை உடனடியாக உணருவான். மற்றும் ஒருவன் எப்பொழுது உண்மையில் ஆன்மீக புரிந்துணர்வுத்தளத்தில் இருக்கிறானோ- புலன்கள், மனம், மற்றும் விவேகம் ஆகிய நிலைகளைக் கடந்து அவன் உன்னதமான நிலையில் இருக்கிறான்.

இந்த ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்னும் ஜெபித்தல் நேரடியாக ஆன்மீகதளத்திலிருந்து ஆக்கப்பட்டமையால் இதன் ஒலி அதிர்வு சகல தாழ்ந்த தளத்திலுள்ள உணர்வுகளை-புலன், மனம், விவேக நிலைகளைக்கடந்து நிற்கிறது. எனவே இந்த மகாமந்திரத்தை ஜெபிப்பதற்கு இந்த மந்திரத்தின் மொழி விளங்க வேண்டுமென்பதோ, தீவிர மனோ சிந்தனையோ அல்லது விவேகமாக ஒழுங்குபடுத்தவேண்டும் என்னும் தேவையோ இல்லை. அது தானாகவே ஆன்மீகத்தளத்திலிருந்து வெளிவருவதால், எவருமே எவ்வித முன் தகைமை பெறாதவர்களுமே இந்த ஜெபித்தலில் ஈடுபட்டு பரவசத்தில் ஆடலாம்.

ஒரு குழந்தையும் இதில் பங்கு கொள்ளலாம். உண்மையில் லௌகீக வாழ்க்கையில் சிக்குண்டவனுக்கு ஒரு குறிப்பிட்ட தரத்தை அடைய நாட்கள் சென்றாலும் அத்தகைய லௌகீகத்தில் மூழ்கியவர்கள் கூட ஆத்மீக நிலைக்கு விரைவில் உயர்த்தப்படுகிறான். பகவானில் அன்பு கொண்ட தூயபக்தன் ஒருவனால் இந்த மந்திரம் ஜெபிக்கப்படுமானால் அதைக் கேட்பவர்களுக்கும் பெரும் பயன் கிட்டும். அத்தகைய ஜெபத்தை பகவானின் தூயபக்தன் ஒருவனது வாயிலிருந்து தான் கேட்கவேண்டும். அது அவனுக்கு உடனடியாகப் பலனைக் கொடுக்கும். பக்தனல்லாத ஒருவனின் வாயிலிருந்து வரும் ஜெபத்தைக் கேட்டல் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பாம்பின் வாயால் தொடப்பட்ட பால் விஷங்கலந்த பலனைக் கொடுக்கிறது.

ஹரா என்னும் பதம் பகவானின் சக்தியை விளிக்கும் முறையாகும். மற்றும் கிருஷ்ணா, ராமா என்னும் பதங்கள் பகவானையே விளிக்கும் முறையாகும். கிருஷ்ணா, ராமா என்னும் இரண்டும் உன்னத ஆனந்தம் என பொருள்படும். மற்றும் ஹரா பகவானின் உன்னத ஆனந்த சக்தியைக் குறிக்கும். விளிவேற்றுமையில் ஹரே என மாறியது. பகவானின் உன்னத ஆனந்த சக்தி எம்மை பகவானைச் சென்றடைய உதவுகிறது.

மாயை என அழைக்கப்படும் ஜடசக்தியும், பகவானின் பல சக்திகளில் ஒன்றாகும். மற்றும் ஜீவராசிகளாகிய நாங்களும் பகவானின் இடைப்பட்ட நிலையிலுள்ள சக்தியாகும். உயிர்வாழிகள் ஜடசக்தியிலும் உயர்ந்தவை என வர்ணிக்கப்படுகின்றன. இந்த உயர்ந்த சக்தி, தாழ்ந்த சக்தியுடன் தொடர்பு கொள்ளும் போது ஒரு ஒவ்வாத நிலை எழுகிறது. ஆனால் உயர்ந்த இடை சக்தியும், ஹரா என அழைக்கப்படும் உயர்ந்த சக்தியுடன் தொடர்பு கொள்ளும் போது உயிர்வாழி அதனுடைய ஆனந்தமான சாதாரண நிலையில் நிலைநிறுத்தப்படுகிறது.

ஹரே,கிருஷ்ணா மற்றும் ராமா என்னும் இந்த மூன்று பதங்களும் மகாமந்திரத்தின் உன்னத விதைகளாகும். இந்த ஜெபித்தல் பகவானையும் அவருடைய அகச்சக்தியாகிய ஹரா வையும் நோக்கிய பந்தப்பட்ட ஆன்மாக்களுக்கு பாதுகாப்பளிக்கக் கோரும் ஒரு ஆன்மீக அழைப்பாகும். இந்த ஜெபித்தல் சரியாக தன் தாயை நோக்கிய ஒரு குழந்தையின் நிஜ அழுகை போன்றது.

ஹரா என்னும் தாய், உன்னத தந்தையாகிய ஹரி அல்லது கிருஷ்ணரின் கருணையைப் பெற பக்தனுக்கு உதவுகிறாள். மற்றும் இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் உண்மையாக ஜெபிக்கும் பக்தனுக்கு பகவான் தன்னை வெளிப்படுத்துகிறார். ஆகவே ஆன்மீக உணர்வுக்கு, இந்த யுகத்தில் இந்த மகாமந்திரத்தை ஜெபிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் நற்பயன் அளிக்கக்கூடியதோ, சக்தி வாய்ந்ததோ அல்ல. ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.