முகப்பு கர்ம விதி

PostHeaderIcon ஶ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி

ஶ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி
(பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள் 25-08-2016)


முழுமுதற் கடவுள் யோகமாயையை தேவகியின் கர்ப்பத்திலிருந்த கருவை கோகுலத்தில் இருந்த வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றிவிட்டு கோகுலத்தில் யசோதாவின் மகளாக தோன்றுமாறு கட்டளையிட்டபோது அவள் பிரபுவை வலம் வந்து அவரின் கட்டளைப்படி பூமியில் தோன்றினாள். இது நடந்தபோது தேவகியின் ஏழாவது கர்ப்பம் கலைந்து விட்டதாக மக்கள் நினைத்தனர். எனவே, பலராமர் தேவகியின் மகனாகவே தோன்றிய போதும் அவர் ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டு அவளின் மகனாகப் பிறந்தார். 

இந்த ஏற்பாட்டிற்குப் பிறகு தன் தூய பக்தர்களிடம் தனது முழு ஆற்றல்களையும் ஒப்படைக்க எப்போதும் தயாராக இருக்கும் முழுமுதற் கடவுளாகிய ஶ்ரீ கிருஷ்ணர், எல்லாப் படைப்புக்களுக்கும் அதிபதியானவர், வசுதேவரின் மனதிற்குள் பிரவேசித்தார். இந்த சந்தர்ப்பத்தில் கிருஷ்ணர் முதலாவதாக தேவகியின் புனிதமான இதயத்தில் குடிகொண்டார் என்று கொள்ள வேண்டும். முழுமுதற் கடவுள் தனது எண்ணற்கரிய ஆற்றலினால் எந்த முறையிலும் தோன்றக் கூடியவர். அவர் சாதாரண பெண் கர்ப்பம் தரிப்பது போலல்லாமல் வசுதேவரின் மனத்திலிருந்து தேவகியின் மனத்திற்கு, முழுமுதற் கடவுளின் நித்தியமான வடிவம், முழு ஆற்றல்களுடன், சூரியனின் கிரணங்கள் கிழக்கில் உதிக்கும் பூரண சந்திரனுக்கு மாற்றப்படுவதுபோல் மாற்றப்பட்டது.

முழுமுதற் கடவுளை தனது தாங்கியிருந்த தேவகியின் பரமான அழகை, அவள் கம்சனின் அரண்மனைச் சிறையில் அடைபட்டிருந்ததால் யாரும் கண்டுகளிக்க முடியவில்லை. ஆனால் தங்கை தேவகியின் பரமான அழகைக் கண்ட கம்சன், அது முழுமுதற் கடவுளை கர்ப்பத்தில் தாங்கியிருந்ததால் அவளுக்கு ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டான். இதனால் அவனுக்கு மனக் கலக்கம் ஏற்பட்டது. வருங்காலத்தில் முழுமுதற் கடவுள் தன்னை நிச்சயம் கொல்வார் என்பதை அவன் அறிந்திருந்ததால், அவர் இப்போது வந்து விட்டார் என்பதையும் உணர்ந்தான்.

அதே சமயம் பிரம்மாவும் சிவனும், நாரதர் போன்ற மகா முனிவர்களும் தேவர்களும் புடை சூழ, பிறர் கண்களுக்குத் தெரியாமல் கம்சனின் அரண்மனைக்குள் பிரவேசித்து, துதிகளை இறைவனை நோக்கி இசைக்கத் தொடங்கினார்கள். "ஸத்யம் பரம்" அதாவது "உன்னதமான பூரண சத்தியம்" என்று அவர்கள் பிரபுவை அழைத்தார்கள்.

தேவர்கள் பிரார்த்தித்தார்கள்: "அன்பான பிரபுவே, உமது நித்தியமான உருவை அறிவது மிகவும் கடினம். மக்கள் பொதுவாக உமது உண்மையான உருவை அறியவியலாதவர்கள். எனவே, உமது உண்மையானதும் நித்தியமானதுமான மூல உருவை வெளிக் காட்டுவதற்காகவே நீர் நேராகவே அவதரிக்கிறீர். உமது பல்வேறு அவதாரங்களை மக்கள் ஒரு வகையாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இரண்டு கைகளுடன் மனிதர்களிடையே நடமாடும் கிருஷ்ணரின் நித்திய வடிவத்தை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் திகைக்கிறார்கள். உமது இந்த நித்தியமான வடிவம் பக்தர்களை மேலும் மேலும் பரமானந்தத்தில் ஆழ்த்துகிறது. ஆனால் பக்தர்களல்லாதவர்கள் இந்த வடிவத்தை அபாயகரமானதாகக் கருதுகிறார்கள்."

தன் பல குழந்தைகளைக் கம்சன் கொன்றிருந்ததால் தேவகி அவனிடம் மிகுந்த அச்சம் கொண்டிருந்தாள். கிருஷ்ணரைப் பற்றிய கவலை அவளை மிகவும் பீடித்திருந்தது. தேவகியை அமைதி பெறச் செய்வதற்காக எல்லா தேவர்களும் தம் மனைவியருடன் அடிக்கடி அவளைச் சந்தித்து, அவளின் மகன் கம்சனால் கொல்லப்படுவான் என்றெண்ணி அஞ்ச வேண்டாமென்று கூறி உற்சாகப் படுத்தியதாக விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அவளது கர்ப்பத்தில் இருந்த கிருஷ்ணர் பூமி பாரத்தைக் குறைப்பதற்காக மட்டுமின்றி, குறிப்பாக யது வம்சத்தைப் பாதுகாப்பதற்காகவே தோன்றுவதால், நிச்சயமாக தேவகியையும் வசுதேவரையும் காப்பாற்றுவாரென்று உறுதி கூறினார்கள்.

பகவத் கீதையில் பகவான் தமது தோற்றம், பிறப்பு, செயல்கள் எல்லாம் பரமானவை. அதை உள்ளவாறு அறிபவன் உடனடியாக ஆன்மீக உலகிற்கு உயர்த்தப்படும் தகுதியைப் பெறுகிறான் என்று கூறியுள்ளார்.அவர் தன் திருவுள்ளத்தின் விருப்பப்படி பிறக்கின்றார். கிருஷ்ணர் பிறந்தபோது எல்லாம் சுபமாய் அமையும் வகையில் கிரகங்கள் தம்மைத் தாமே நிலைப்படுத்திக் கொண்டன. அந்த வேளையில் , கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, எல்லாத் திசைகளிலும், எங்கும் அமைதியும் செழிப்பும் நிலவின. சுபமான நட்சத்திரங்கள் வானில் காணப்பட்டன. எல்லோருடைய மனங்களிலும் நல்லது நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றின. நதிகளில் நீர் நிரம்பி ஓடியது. ஏரிகளில் அழகிய தாமரை மலர்கள் பூத்திருந்தன. வனங்களில் அழகிய பறவைகளும் மயில்களும் நிறைந்து காணப்பட்டன. காற்று மிகவும் இனிதாக, பல மலர்களின் நறுமணங்களைப் பரப்பியபடி வீசிற்று.

மனைகளில் வேள்வித் தீ வளர்த்த அந்தணர்கள் தம் மனைகளில் மங்கலம் நிறைந்திருப்பதை உணர்ந்தார்கள். அசுரர்களின் தொல்லை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோமாக்னி இப்போது மீண்டும் துவக்கப்பட்டது. புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் வருகையை அறிவிக்கும் பரமான ஒலி அலைகள் அவர்களின் காதுகளில் விழுந்தது. கந்தர்வர்களும் கின்னர்களும் கீதம் இசைத்தனர். சித்தர்களும் சாரணர்களும் முழுமுதற் கடவுளைத் துதித்தனர். சுவர்க்கத்தின் கிரகங்களில் தேவர்களும் அவர்களின் மனைவியரும், அப்ஸரஸ்களும் நர்த்தனமாடினர். மகா முனிவர்களும் தேவர்களும் மனம் மகிழ்ந்து மலர் தூவினார்கள். கடற்கரைகளில் அலைகள் மென்மையாக ஒலித்தன. கடலின் மேல் காணப்பட்ட மேகங்கள் இனிமையான இடியோசையை எழுப்பின.

எல்லாம் இவ்வாறு நல்ல முறையில் அமைந்திருக்க, ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கும் பிரபுவாகிய விஷ்ணு இரவின் இருளில் தேவகியின் முன்பு முழுமுதற் கடவுளாகத் தோன்றினார். கமானிக்யா எனும் சோதிட நூலில் கிருஷ்ணர் பிறந்தபோது ஏற்பட்டிருந்த கிரக நிலை நேர்த்தியாக விளக்க்கப்பட்டுள்ளது. 

நான்கு கைகளுடன், கைகளில் சங்கமும், கதையும், சக்கரமும், தாமரையும் தாங்கி ஶ்ரீவத்ஸக் குறியுடன், கௌஸ்துப ஆரத்தை அணிந்து, மஞ்சள் பட்டாடை உடுத்தி, கார்மேகம் போல் ஒளி வீசி, வைடூரிய மகுடமும், விலைமதிப்பற்ற கங்கணக்களும், காதணிகளும், பிற ஆபரணங்களும் உடல் முழுவதும் அணிந்து தலையில் அடர்ந்த முடியுடன் தோன்றிய அந்த அற்புதமான குழந்தையை வசுதேவர் கண்டார். அக்குழந்தையின் அசாதாரணமான அம்சங்களைக் கண்டு வசுதேவர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இத்தனை அலங்காரங்களும் எப்படி ஏற்பட்டன? எனவே, பிரபுவாகிய கிருஷ்ணர் தோன்றிவிட்டார் என்பதை அவர் புரிந்து கொண்டு பரவசமடைந்தார்.

வசுதேவரும் தேவகியும் தமது அன்பான பிரார்த்தனைகளைப் பகவானுக்கு சமர்ப்பித்தார்கள். " பிரபுவே! நீர் பிறந்திருப்பதை கமசன் அறிந்ததும் உமக்குத் தீங்கு செய்ய முயல்வான். தயவு செய்து எங்களின் ஜடக் கண்களில் படாமல் நீர் மறைந்திருக்க வேண்டும். எனவே, விஷ்ணுவின் சின்னங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றைத் தாங்கியுள்ள நான்கு கைகளை கொன்ட இவ்வடிவத்தை மறைத்துக் கொள்ளும்" என வேண்டிக் கொண்டார்கள்.

தமது பெற்றோரின் பிரார்த்தனையை செவியுற்ற பிரபு கூறினார் : " புருஷோத்தமனான நானே உங்களுக்கு குழந்தையாகப் பிறந்திருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த விஷ்ணு வடிவில் தோன்றினேன். நான் ஒரு சாதாரண குழந்தையாகப் பிறந்திருக்க முடியும். ஆனால், முழுமுதற் கடவுளான நானே உங்களுக்கு குழந்தையாகப் பிறந்திருக்கிறேன் என்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள். என்னைப் பற்றி நீங்கள் மிகவும் கவலையுற்றிருக்கிறீர்கள். கம்சனிடம் அச்சம் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். எனவே, என்னை கோகுலத்துக்கு உடனடியாக எடுத்துச் சென்று, யசோதாவுக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தைக்கு பதிலாக வைத்து விடும்படி நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன்."

தன் தாய் தந்தையரிடம் கூறிவிட்டு தன்னை ஒரு சாதாரண குழந்தையாக மாற்றிக் கொண்டார். கடவுளின் கட்டளைப்படி, வசுதேவர் தன் மகனை எடுக்க முற்பட்ட அதே சமயத்தில் நந்தகோபருக்கும் யசோதைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிரபுவின் உள்ளுறை சக்தியான யோகமாயை அவ்வாறு பெண்ணாகப் பிறந்தாள். வசுதேவர் கிருஷ்ணரைத் தூக்கிக் கொண்டு புறப்பட்ட சமயம் கம்சனின் காவலர்கள் உறங்கிப் போனார்கள். கதவுகள் தாமாகத் திறந்து கொண்டன. இருள் அடர்ந்திருந்தாலும் சூரிய வெளிச்சத்தில் காண்பதுபோல் எல்லாம் வெளியில் தெளிவாகத் தெரிந்தன. அதே சமயம் ஆகாயத்தில் இடி இடித்து பெரும் மழை பெய்தது. கொட்டும் மழையில் வசுதேவர் கிருஷ்ணரைச் சுமந்து சென்றபோது அவருக்கு மழையினால் இடஞ்சல் ஏற்படாத வகையில் ஷேசர் தனது விரிந்த படத்தைக் குடையாகப் பிடித்துச் சென்றார். அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த யமுனை ஆறு வழி விட்டது. 

இப்படியாக வசுதேவர் யமுனை நதியைக் கடந்து சென்று கோகுலத்தில் இருந்த நந்த மகராஜாவின் அரண்மனைக்குச் சென்றபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வசுதேவர் யசோதையின் வீட்டுக்குள் சென்று ஆண் குழந்தையையும், பெண் குழந்தையும் மாற்றி வைத்து, பெண் குழந்தையை எடுத்து கொண்டு கம்சனின் சிறையை அடைந்தபோது, அவனுக்கு சந்தேகம் ஏற்படாதபடி விலங்குகளைத் திரும்பவும் பூட்டிக்கொண்டார். அன்னை யசோதை தனக்கு குழந்தை பிறந்ததை அறிந்திருந்தால். ஆனால், களைத்திருந்ததால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் விழிதெழுந்தபோது தனக்குப் பிறந்தது ஆணா, பெண்ணா என்பது அவளுக்கு நினைவில்லை.

மறுநாள் காலையில் குழந்தை பிறந்த செய்தி அறிந்து கம்சன் சிறைச்சாலைக்கு வந்து தேவகி, வசுதேவரிடமிருந்த பெண் குழந்தையைப் பறித்துக் கொல்ல முற்பட்ட போது அது மேலே சென்று துர்க்காதேவியாகி, கம்சனைக் கொல்ல பிறந்த குழந்தை பாதுகாப்பாக உள்ளது என்று கூறி மறைந்தது. இவ்வாறாக பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் தோற்றம் இடம் பெற்றது.

தெய்வத்திரு அ.ச. பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய "கிருஷ்ணா" புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் புத்தகத்திலிருந்து...