முகப்பு

 

PostHeaderIcon பிரபுபாதர் தோன்றிய தினம்

இன்று (18-08-2014) அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியார் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அவர்கள் தோன்றிய தினம்.உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ "கிருஷ்ண பக்தி" எனும் வீட்டைக் கட்டியவர். மனிதர்களிடையே வாழ்ந்த உன்னதமான மகான். ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவின் தீர்க்க தரிசனமான "உலகின் ஒவ்வொரு நகரங்களிலும் கிராமங்களிலும் ஹரே கிருஷ்ணா மகா மந்திரம் ஒலிக்கும்" என்பதை உலகுக்கு உணர்த்திய உத்தமர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர். ஏனெனில் நாம் இன்று "கிருஷ்ண பக்தி" எனும் ரசத்தை பருகிட வைத்தவரும் அவரே. பகவத் கீதையை உண்மையுருவில் உலகுக்கு அளித்தவரும் அவரே. 

வெறும் 40 இந்திய ரூபாயைக் கொண்டு இலவச பயணச் சீட்டைபெற்று சரக்கு கப்பல் மூலம் 70 வது வயதில் தனது ஆன்மீகக் குருவின் கட்டளையான "மேலை நாடுகளில் கிருஷ்ணரைப் பற்றி பிரச்சாரம் செய்யவும்" என்பதை நிறைவேற்றுவதற்காக அமெரிக்கா சென்று "இஸ்கான்" அதாவது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஸ்தாபித்து வெறும் 12 ஆண்டுகளில் 108 ஶ்ரீ கிருஷ்ண ஆலயங்களை அமைத்து தனது அளப்பரிய பணியாகிய அவரது நூல்களை எமக்குத் தந்துள்ளார். ஶ்ரீல பிரபுபாதர் கூறியது என்னவெனில் "நான் எப்பொழுதும் உங்களுடன் எனது புத்தக வடிவில் வாழ்வேன் " என்பதுவாகும். 

இக்கலியுகத்திலே இவ் இலகு மார்க்கம் மூலம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நாம் அடைவதற்கு வழி காட்டிய ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் தோன்றிய இந்நன்னாளிலே நாம் கிருஷ்ண உணர்வில் மேலும் முன்னேறுவதற்கு அவரது நல்லாசியை வேண்டுவோமாக.

ஹரே கிருஷ்ணா!

 

PostHeaderIcon ஶ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி

ஶ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி
(பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள் 17-08-2014)


முழுமுதற் கடவுள் யோகமாயையை தேவகியின் கர்ப்பத்திலிருந்த கருவை கோகுலத்தில் இருந்த வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றிவிட்டு கோகுலத்தில் யசோதாவின் மகளாக தோன்றுமாறு கட்டளையிட்டபோது அவள் பிரபுவை வலம் வந்து அவரின் கட்டளைப்படி பூமியில் தோன்றினாள். இது நடந்தபோது தேவகியின் ஏழாவது கர்ப்பம் கலைந்து விட்டதாக மக்கள் நினைத்தனர். எனவே, பலராமர் தேவகியின் மகனாகவே தோன்றிய போதும் அவர் ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டு அவளின் மகனாகப் பிறந்தார். 

இந்த ஏற்பாட்டிற்குப் பிறகு தன் தூய பக்தர்களிடம் தனது முழு ஆற்றல்களையும் ஒப்படைக்க எப்போதும் தயாராக இருக்கும் முழுமுதற் கடவுளாகிய ஶ்ரீ கிருஷ்ணர், எல்லாப் படைப்புக்களுக்கும் அதிபதியானவர், வசுதேவரின் மனதிற்குள் பிரவேசித்தார். இந்த சந்தர்ப்பத்தில் கிருஷ்ணர் முதலாவதாக தேவகியின் புனிதமான இதயத்தில் குடிகொண்டார் என்று கொள்ள வேண்டும். முழுமுதற் கடவுள் தனது எண்ணற்கரிய ஆற்றலினால் எந்த முறையிலும் தோன்றக் கூடியவர். அவர் சாதாரண பெண் கர்ப்பம் தரிப்பது போலல்லாமல் வசுதேவரின் மனத்திலிருந்து தேவகியின் மனத்திற்கு, முழுமுதற் கடவுளின் நித்தியமான வடிவம், முழு ஆற்றல்களுடன், சூரியனின் கிரணங்கள் கிழக்கில் உதிக்கும் பூரண சந்திரனுக்கு மாற்றப்படுவதுபோல் மாற்றப்பட்டது.

முழுமுதற் கடவுளை தனது தாங்கியிருந்த தேவகியின் பரமான அழகை, அவள் கம்சனின் அரண்மனைச் சிறையில் அடைபட்டிருந்ததால் யாரும் கண்டுகளிக்க முடியவில்லை. ஆனால் தங்கை தேவகியின் பரமான அழகைக் கண்ட கம்சன், அது முழுமுதற் கடவுளை கர்ப்பத்தில் தாங்கியிருந்ததால் அவளுக்கு ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டான். இதனால் அவனுக்கு மனக் கலக்கம் ஏற்பட்டது. வருங்காலத்தில் முழுமுதற் கடவுள் தன்னை நிச்சயம் கொல்வார் என்பதை அவன் அறிந்திருந்ததால், அவர் இப்போது வந்து விட்டார் என்பதையும் உணர்ந்தான்.

அதே சமயம் பிரம்மாவும் சிவனும், நாரதர் போன்ற மகா முனிவர்களும் தேவர்களும் புடை சூழ, பிறர் கண்களுக்குத் தெரியாமல் கம்சனின் அரண்மனைக்குள் பிரவேசித்து, துதிகளை இறைவனை நோக்கி இசைக்கத் தொடங்கினார்கள். "ஸத்யம் பரம்" அதாவது "உன்னதமான பூரண சத்தியம்" என்று அவர்கள் பிரபுவை அழைத்தார்கள்.

தேவர்கள் பிரார்த்தித்தார்கள்: "அன்பான பிரபுவே, உமது நித்தியமான உருவை அறிவது மிகவும் கடினம். மக்கள் பொதுவாக உமது உண்மையான உருவை அறியவியலாதவர்கள். எனவே, உமது உண்மையானதும் நித்தியமானதுமான மூல உருவை வெளிக் காட்டுவதற்காகவே நீர் நேராகவே அவதரிக்கிறீர். உமது பல்வேறு அவதாரங்களை மக்கள் ஒரு வகையாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இரண்டு கைகளுடன் மனிதர்களிடையே நடமாடும் கிருஷ்ணரின் நித்திய வடிவத்தை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் திகைக்கிறார்கள். உமது இந்த நித்தியமான வடிவம் பக்தர்களை மேலும் மேலும் பரமானந்தத்தில் ஆழ்த்துகிறது. ஆனால் பக்தர்களல்லாதவர்கள் இந்த வடிவத்தை அபாயகரமானதாகக் கருதுகிறார்கள்."

தன் பல குழந்தைகளைக் கம்சன் கொன்றிருந்ததால் தேவகி அவனிடம் மிகுந்த அச்சம் கொண்டிருந்தாள். கிருஷ்ணரைப் பற்றிய கவலை அவளை மிகவும் பீடித்திருந்தது. தேவகியை அமைதி பெறச் செய்வதற்காக எல்லா தேவர்களும் தம் மனைவியருடன் அடிக்கடி அவளைச் சந்தித்து, அவளின் மகன் கம்சனால் கொல்லப்படுவான் என்றெண்ணி அஞ்ச வேண்டாமென்று கூறி உற்சாகப் படுத்தியதாக விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அவளது கர்ப்பத்தில் இருந்த கிருஷ்ணர் பூமி பாரத்தைக் குறைப்பதற்காக மட்டுமின்றி, குறிப்பாக யது வம்சத்தைப் பாதுகாப்பதற்காகவே தோன்றுவதால், நிச்சயமாக தேவகியையும் வசுதேவரையும் காப்பாற்றுவாரென்று உறுதி கூறினார்கள்.

பகவத் கீதையில் பகவான் தமது தோற்றம், பிறப்பு, செயல்கள் எல்லாம் பரமானவை. அதை உள்ளவாறு அறிபவன் உடனடியாக ஆன்மீக உலகிற்கு உயர்த்தப்படும் தகுதியைப் பெறுகிறான் என்று கூறியுள்ளார்.அவர் தன் திருவுள்ளத்தின் விருப்பப்படி பிறக்கின்றார். கிருஷ்ணர் பிறந்தபோது எல்லாம் சுபமாய் அமையும் வகையில் கிரகங்கள் தம்மைத் தாமே நிலைப்படுத்திக் கொண்டன. அந்த வேளையில் , கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, எல்லாத் திசைகளிலும், எங்கும் அமைதியும் செழிப்பும் நிலவின. சுபமான நட்சத்திரங்கள் வானில் காணப்பட்டன. எல்லோருடைய மனங்களிலும் நல்லது நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றின. நதிகளில் நீர் நிரம்பி ஓடியது. ஏரிகளில் அழகிய தாமரை மலர்கள் பூத்திருந்தன. வனங்களில் அழகிய பறவைகளும் மயில்களும் நிறைந்து காணப்பட்டன. காற்று மிகவும் இனிதாக, பல மலர்களின் நறுமணங்களைப் பரப்பியபடி வீசிற்று.

மனைகளில் வேள்வித் தீ வளர்த்த அந்தணர்கள் தம் மனைகளில் மங்கலம் நிறைந்திருப்பதை உணர்ந்தார்கள். அசுரர்களின் தொல்லை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோமாக்னி இப்போது மீண்டும் துவக்கப்பட்டது. புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் வருகையை அறிவிக்கும் பரமான ஒலி அலைகள் அவர்களின் காதுகளில் விழுந்தது. கந்தர்வர்களும் கின்னர்களும் கீதம் இசைத்தனர். சித்தர்களும் சாரணர்களும் முழுமுதற் கடவுளைத் துதித்தனர். சுவர்க்கத்தின் கிரகங்களில் தேவர்களும் அவர்களின் மனைவியரும், அப்ஸரஸ்களும் நர்த்தனமாடினர். மகா முனிவர்களும் தேவர்களும் மனம் மகிழ்ந்து மலர் தூவினார்கள். கடற்கரைகளில் அலைகள் மென்மையாக ஒலித்தன. கடலின் மேல் காணப்பட்ட மேகங்கள் இனிமையான இடியோசையை எழுப்பின.

எல்லாம் இவ்வாறு நல்ல முறையில் அமைந்திருக்க, ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கும் பிரபுவாகிய விஷ்ணு இரவின் இருளில் தேவகியின் முன்பு முழுமுதற் கடவுளாகத் தோன்றினார். கமானிக்யா எனும் சோதிட நூலில் கிருஷ்ணர் பிறந்தபோது ஏற்பட்டிருந்த கிரக நிலை நேர்த்தியாக விளக்க்கப்பட்டுள்ளது. 

நான்கு கைகளுடன், கைகளில் சங்கமும், கதையும், சக்கரமும், தாமரையும் தாங்கி ஶ்ரீவத்ஸக் குறியுடன், கௌஸ்துப ஆரத்தை அணிந்து, மஞ்சள் பட்டாடை உடுத்தி, கார்மேகம் போல் ஒளி வீசி, வைடூரிய மகுடமும், விலைமதிப்பற்ற கங்கணக்களும், காதணிகளும், பிற ஆபரணங்களும் உடல் முழுவதும் அணிந்து தலையில் அடர்ந்த முடியுடன் தோன்றிய அந்த அற்புதமான குழந்தையை வசுதேவர் கண்டார். அக்குழந்தையின் அசாதாரணமான அம்சங்களைக் கண்டு வசுதேவர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இத்தனை அலங்காரங்களும் எப்படி ஏற்பட்டன? எனவே, பிரபுவாகிய கிருஷ்ணர் தோன்றிவிட்டார் என்பதை அவர் புரிந்து கொண்டு பரவசமடைந்தார்.

வசுதேவரும் தேவகியும் தமது அன்பான பிரார்த்தனைகளைப் பகவானுக்கு சமர்ப்பித்தார்கள். " பிரபுவே! நீர் பிறந்திருப்பதை கமசன் அறிந்ததும் உமக்குத் தீங்கு செய்ய முயல்வான். தயவு செய்து எங்களின் ஜடக் கண்களில் படாமல் நீர் மறைந்திருக்க வேண்டும். எனவே, விஷ்ணுவின் சின்னங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றைத் தாங்கியுள்ள நான்கு கைகளை கொன்ட இவ்வடிவத்தை மறைத்துக் கொள்ளும்" என வேண்டிக் கொண்டார்கள்.

தமது பெற்றோரின் பிரார்த்தனையை செவியுற்ற பிரபு கூறினார் : " புருஷோத்தமனான நானே உங்களுக்கு குழந்தையாகப் பிறந்திருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த விஷ்ணு வடிவில் தோன்றினேன். நான் ஒரு சாதாரண குழந்தையாகப் பிறந்திருக்க முடியும். ஆனால், முழுமுதற் கடவுளான நானே உங்களுக்கு குழந்தையாகப் பிறந்திருக்கிறேன் என்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள். என்னைப் பற்றி நீங்கள் மிகவும் கவலையுற்றிருக்கிறீர்கள். கம்சனிடம் அச்சம் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். எனவே, என்னை கோகுலத்துக்கு உடனடியாக எடுத்துச் சென்று, யசோதாவுக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தைக்கு பதிலாக வைத்து விடும்படி நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன்."

தன் தாய் தந்தையரிடம் கூறிவிட்டு தன்னை ஒரு சாதாரண குழந்தையாக மாற்றிக் கொண்டார். கடவுளின் கட்டளைப்படி, வசுதேவர் தன் மகனை எடுக்க முற்பட்ட அதே சமயத்தில் நந்தகோபருக்கும் யசோதைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிரபுவின் உள்ளுறை சக்தியான யோகமாயை அவ்வாறு பெண்ணாகப் பிறந்தாள். வசுதேவர் கிருஷ்ணரைத் தூக்கிக் கொண்டு புறப்பட்ட சமயம் கம்சனின் காவலர்கள் உறங்கிப் போனார்கள். கதவுகள் தாமாகத் திறந்து கொண்டன. இருள் அடர்ந்திருந்தாலும் சூரிய வெளிச்சத்தில் காண்பதுபோல் எல்லாம் வெளியில் தெளிவாகத் தெரிந்தன. அதே சமயம் ஆகாயத்தில் இடி இடித்து பெரும் மழை பெய்தது. கொட்டும் மழையில் வசுதேவர் கிருஷ்ணரைச் சுமந்து சென்றபோது அவருக்கு மழையினால் இடஞ்சல் ஏற்படாத வகையில் ஷேசர் தனது விரிந்த படத்தைக் குடையாகப் பிடித்துச் சென்றார். அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த யமுனை ஆறு வழி விட்டது. 

இப்படியாக வசுதேவர் யமுனை நதியைக் கடந்து சென்று கோகுலத்தில் இருந்த நந்த மகராஜாவின் அரண்மனைக்குச் சென்றபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வசுதேவர் யசோதையின் வீட்டுக்குள் சென்று ஆண் குழந்தையையும், பெண் குழந்தையும் மாற்றி வைத்து, பெண் குழந்தையை எடுத்து கொண்டு கம்சனின் சிறையை அடைந்தபோது, அவனுக்கு சந்தேகம் ஏற்படாதபடி விலங்குகளைத் திரும்பவும் பூட்டிக்கொண்டார். அன்னை யசோதை தனக்கு குழந்தை பிறந்ததை அறிந்திருந்தால். ஆனால், களைத்திருந்ததால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் விழிதெழுந்தபோது தனக்குப் பிறந்தது ஆணா, பெண்ணா என்பது அவளுக்கு நினைவில்லை.

மறுநாள் காலையில் குழந்தை பிறந்த செய்தி அறிந்து கம்சன் சிறைச்சாலைக்கு வந்து தேவகி, வசுதேவரிடமிருந்த பெண் குழந்தையைப் பறித்துக் கொல்ல முற்பட்ட போது அது மேலே சென்று துர்க்காதேவியாகி, கம்சனைக் கொல்ல பிறந்த குழந்தை பாதுகாப்பாக உள்ளது என்று கூறி மறைந்தது. இவ்வாறாக பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் தோற்றம் இடம் பெற்றது.

தெய்வத்திரு அ.ச. பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய "கிருஷ்ணா" புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் புத்தகத்திலிருந்து...
 

PostHeaderIcon ஸ்ரீ நித்தியானந்தர்

(12-02-2014) நித்தியானந்த திரயோதசி


ஸ்ரீ நித்தியானந்தர்பகவான் நித்தியானந்தர், நித்தியானந்த ராமா எனவும் அழைக்கப்படுவர். ஏனெனில் அவர் உண்மையில் பகவான் பலராமரே. ஆன்மீக உலகில் முதல் அவதாரம் பலராமர். பகவான் கிருஷ்ணருடைய நித்திய பொழுது போக்குகளில் அவரே பகவான் கிருஷ்ணரின் மூத்த சகோதரர் ஆவார். பகவான் கிருஷ்ணரின் விரிவாகையால் பகவான் பலராமரும் சகல சக்திகளும் கொண்டவராவார்.

பகவான் சைதன்யர் தோன்றுவதற்கு பதினான்கு வருடங்களுக்கு முன்பு பகவான் நித்தியானந்தர் இப்பூவுலகில் தோன்றினார். அவர் பகவான் பலராமர் ஆகையால் பகவான் சைதன்யரை விட வேறு பெற்றோருக்கு பிறந்திருப்பினும் பகவான் சைதன்யர் அவரை அவருடைய மூத்த சகோதரராகவே கருதினார். பகவான் நித்தியானந்தர் தன்னை பகவான் சைதன்யரின் நிரந்தர சேவகன் என்று சிந்திப்பதுடன் எப்பொழுதும் எளிமையான கீழ்ப்படியும் மனோநிலையிலேயே செயல்பட்டார்.

சகல பிரபஞ்சங்களையும் தன் தலைமீது தாங்கும் அனந்தசேஷன், மூலசங்கர்ஷனின் ஒரு பகுதி விரிவே. பகவான் நித்தியானந்தர் மூலசங்கர்ஷன் எனவும், அனந்தசேஷன் எனவும் விபரிக்கப்பட்டாலும், இவ்விபரணம் அவருடைய புகழை உண்மையில் மேம்படுத்தவில்லை. ஏனெனில் பகவான் பலராமரின் உருவம் மற்றைய உருவங்களை விட உயரியது. பகவான் நித்தியானந்தர் அபூர்வமானவர். அவருடைய பொழுதுபோக்குகளும் தனித்துவமும் பகவானின் பிற அவதாரங்களால் கூட பிரதி பண்ணப்பட முடியாதவை.

அவர் மாயாப்பூரிலிருந்து ஆறுமணி பிரயாண தூரத்திலுள்ள "ஏக சக்ர" என்னும் கிராமத்தில் தோன்றினார். தந்தை பெயர் ஷஷகதாய் ஒஜ்கா. தாயார் பக்தி நிறைந்த பத்மாவதி தேவி ஆவார். அவர்கள் அவர்களுடைய அற்புத மகன் மீது பூரண அன்பு கொண்டு அவரை ஒரு கணப்பொழுது பிரிந்து வாழ்வதை கூட எண்ணிப்பார்க்க முடியாதவர்களாக இருந்தார்கள்.

பகவான் நித்தியானந்தர் அவருடைய குழந்தைப் பராயத்தில் அவருடைய விழையாட்டுத் தோழர்களுடன் பல அற்புதமான பொழுதுபோக்கு லீலைகளைப் புரிந்தார். ஸ்ரீலபிருந்தாவன தாஸ தாகூர் எழுதிய சைதன்ய பாகவத்தில் எப்படி பகவான் நித்தியானந்தர் கிருஷ்ணரதும், பலராமரதும் அல்லது ராமர், லட்சுமணன் மற்றும் அனுமான் ஆகியோரின் பொழுதுபோக்கு லீலைகளை நடித்தார் என்றும் அப்படி நடிக்கும்போது அவர்; எப்படி அந்த லீலைகளின் பாத்திர குணங்களில் முற்றாக அமிழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு. அவர் பலராமர், லட்சுமணனைப் போன்று விஷேச திறமையாக நடிக்கக்கூடியதாக இருந்ததன் காரணம் உண்மையில் அவையே அவரது அழியாத அடையாளமாகும்.

ஒரு முறை அவர் லட்சுமணனைப்போல் மிகத்திறமையாக நடித்தார். லட்சுமணனுடைய பொழுதுபோக்குகளின் போது - யுத்த்தில் இராவணனின் படைகளினால் லட்சுமணன் மிகவும் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் - அவர் அச்சமயத்தில் மயங்கிவிழ அவரது நண்பர்களால் அவரை தெளிவிக்க முடியவில்லை. அவரின் தோழர்களில் ஒருவர் அனுமாரைப்போல் நடித்து "கந்தமாதன" மலையிலிருந்து மாற்றும் மூலிகைகளைக் கொண்டு வருவதுபோல் நடித்ததுமே அவர் தெளிந்தார்.

நித்தியானந்த பிரபு குடும்ப வாழ்வை விட்டு விலகி இந்தியாபூராவும் தன்னிச்சையாக திரிய விரும்பினார். தான் பிரயாணம் செய்யும்போது இவரையும் அழைத்துச் செல்வதாக அவரது தகப்பனாரிடம் கேட்ட சந்நியாசியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பகவானைப் பிரிந்த துயரினால் அவருடைய தகப்பனார் உயிர் நீத்தார்.

அவர் பல வருடங்களாக இந்தியா முழவதும் திரிந்து சகல முக்கியமான புண்ணிய தலங்களையும் தரிசித்தார். ஆனால் அவருடைய ஆன்மீக தீர்க்க தரிசனத்தால், பகவான் சைதன்யர் பகவானுடைய தூயநாமத்தையே ஜெபித்து யுகதர்மத்தை நிறுத்தும் உன்னத பொழுதுபோக்கை அழியாத துணைவர்களுடன் ஆரம்பிக்கப் போகிறார் எனப்புரிந்ததும், பகவான் நித்தியானந்தர் உடனடியாகவே "நவதுவீபம்" சென்று அவருடைய பிரிய பகவான் சைதன்யருடன் இணைந்தார்.

 

ஸ்ரீ தாமோதரஷ்டகம்

கிருஷ்ண துவைபாயன வியாச முனிவரின் பத்ம புராணத்தில் - நாரத முனிவருடனும் சௌனகரிஷியுடனும் சம்பாஷித்தபொழுது சத்ய விரத முனிவர் கூறுவது.

சத்ய விரத முனிவரால் பேசப்பட்ட தாமோதரஷ்டகம் எனும் தாமோதரரை கவரும் இப்பாராயணத்தை தாமோதர மாதத்தில் (30-10-
2012 முதல் 28-11-2012 வரை) நித்தமும் பாடி பகவான் தாமோதரரை வழிபட வேண்டும்.

மேலும் வாசிக்க...

 

PostHeaderIcon ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயம் - யாழ்ப்பாணம்

www.jaffnakrishnatemple.com

மேலதிக விரங்களை அறிந்துகொள்வதற்கு ஆலயத்தின் பிரத்தியேக

இணையத்தளத்திற்கு செல்வதற்கு இங்கே அழுத்தவும்.

 

PostHeaderIcon கர்மவிதி

தற்காப்பற்ற மிருகங்களை நூற்றுக்கணக்கில் கொன்றால் தான் நாம் பட்டினி இருப்பதைத் தடுக்க முடியும் என்பது உண்மையல்ல.


மிருகங்களைக் கொன்றவன் அடுத்த பிறவியில் மிருகமாகப் பிறந்து
அவன் கொன்ற அதே மிருகத்தினால் கொல்லப்படுவான்.

கர்ம விதி

 

PostHeaderIcon ராமாயணம் - முப்பரிமாணத் தோற்றத்தில் (3D)

 


 

 

மேலும் வாசிக்க...

 

PostHeaderIcon ஸ்ரீ ராம நவமி

ஸ்ரீ ராம நவமி– மார்ச் 31, 2012

 

 

மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம்.

பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். இந்த நன்னாளில் ராமனின் பெருமைகளை அறிந்து கொள்வோம்.

தர்மம் காக்க அவதரித்த ராமன்

தர்மம் அழிந்து, அதர்மம் தலை எடுக்கும் போதெல்லாம் மண்ணுலகையும், மக்களையும் காக்க மகாவிஷ்ணு அவதாரங்கள் எடுத்தார் என்கின்றன புராணங்கள். இதில் ஏழாவதாக எடுத்த ராம அவதாரம் மனித அவதாரமாக இருந்ததால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முந்தைய அவதாரங்களான மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் வாமனர், பரசுராமர் ஆகியவை, நீர்வாழ்வனவாகவும், விலங்காகவும், விலங்கும், மனிதனும் இணைந்தும் காணப்படும். இந்த ராம அவதாரத்தில் தான் மனிதர்கள் படும் அனைத்து இன்னல்களையும் இறைவனும் அனுபவித்து அதன் மூலம் மக்களுக்கு பாடம் புகட்டியிருக்கிறார்.

அவதார சிறப்புகள்

ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக உதித்த ராமன், சீதாதேவியை மணந்து ஏகபத்தினி விரதனாக இருந்தார். தந்தை செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றினார். அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்து மக்களை காத்தார். இவரது சிறப்புகளை விளக்கும் ராமாயணம் நமது இதிகாசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இதில் ராம அவதாரத்தைப் பற்றியும், அவர் செய்த சாதனைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

ராம நவமி கொண்டாட்டம்

அவதார நாயகன் உதித்த நாளை, ஸ்ரீராம நவமி விழாவாக ஆண்டு தோறும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.

நீர்மோர், பானகம்

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷே கப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

ராம நாமத்தின் மகிமை

பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணை யானது ராம நாமம். ஸ்ரீராம நவமியன்று ராமநாமம் சொல்வ தும், ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப் படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத் தூண்டு கிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ராம நாமத்தை சொல்லி ராம நவமி கொண்டாடுவோம். தசரத மைந்தனின் அருள் பெறுவோம்.

 

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராமா ராமா ஹரே ஹரே

 

PostHeaderIcon சிக்‌ஷாஷ்டகம்

 

PostHeaderIcon நவீன காலத்தில் யோகப் பயிற்சி

கலியுக தர்மம் ஹரி நாம சங்கீர்த்தனமே!
 

பகவான் ஸ்ரீ சைதன்யரும் அவரது சகாக்களும்
 

          நாம  சங்கீர்த்தனமே இந்த கலியுகத்திற்கு உகந்த வழிபாட்டு முறையாகும். தியானம், ஹோமம், பூஜை ஆகியவற்றில் ஈடுபாடு குறைந்து கலியுகத்தில் ஆலயத்துக்கு செல்வதற்கு கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே மிகச்சிறந்ததும் பொருத்தமானதுமாகும். மற்ற முறைகளில் ஈடுபட மக்களுக்குத் தகுந்த பணமோ ஈடுபடப் பொறுமையோ, ஆழ்ந்து யோசித்து மனதை நிலநிறுத்தவும் முடியாது. சுலபமாக ஈடுபடக்கூடிய பக்தி தொண்டுகளிலேயே அவர்கள் மனதைச் செலுத்தும்படி செய்கிறது இந்த ஹரி நாமசங்கீர்த்தனம். பல மொழிகளோ, அர்த்தமோ, தெரிய வேண்டியதில்லை. சிரமம் இல்லாமல் ஈடுபட முடியும், பயிற்சியும் சுலபமானது.

          ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தினை வாய்விட்டு பாடும்போது வெட்கம், தடுமாற்றம், அகங்காரம் ஆகியவை அழிந்து தூய்மையும் பேரானந்தமும் அடைய முடியும். இதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர், செல்வந்தர், ஏழை, உயர்குலம், தாழ்ந்தகுலம் போன்ற வித்யாசங்கள் எதுவுமே இல்லை. ஜெபம், தியானம் போன்றவை தனியே செய்வது. ஆனால் நாமசங்கீர்த்தனம் கூட்டுப்பிரார்த்தனையாகச் செய்வது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் "நாம சங்கீர்த்தன தந்தை" ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தொடங்கிய ஹரே கிருஷ்ண சங்கீர்த்தன குழுவினரின் குறிக்கோள் சங்கீர்த்தன மகிமையைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதே. கிருஷ்ண பக்தியை பெறுவதற்கு எல்லோருக்கும் தகுதியுண்டு, அத்தகுதி நம்பிக்கை என்பதே. எனவே கிருஷ்ணரிடம் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கிருஷ்ணரின் புனித நாமத்தை வழங்குகிறோம்.

    கிருஷ்ணரின் கருணையை பெற விரும்பும் மக்கள் அனைவரையும் இந்த சனாதன தர்மம் கவர்ந்திழுக்கிறது. மேலும் கிருஷ்ணரின் நாமத்தில் நம்பிக்கைகொண்டு உள்ளவர்கள் அனைவரையும் நாம் அழைக்கிறோம். ஜாதி, மதம், இனம் என்ற பேதங்களைப்பாராது கிருஷ்ணரின் நம்பிக்கையையும், போதனைகளையும் பரப்புவதற்காகவே ஹரே கிருஷ்ண இயக்கம் தொடங்கி இன்று நாம சங்கீர்த்தனத்திற்கு புத்துயிர் அளித்து வருகின்றது. "பரம் விஜயதே ஸ்ரீ கிருஷ்ண சங்கீர்த்தனம்"

 

PostHeaderIcon இருப்பிடம் கேட்ட கலிபுருஷன்

           தரும புத்திரரால் முடிசூடப்பட்ட பரீக்ஷித்து, தன் முன்னோர்கள் பெயர் விளங்கச் சிறந்த முறையில் ராஜ்ஜியபரிபாலனம் செய்து வந்தான். உத்தரனுடைய பெண் இராவதியை மணந்து கொண்டான். அவருக்கு ஜனமேஜன் முதலான நான்கு குமாரர்கள் பிறந்தார்கள். குரு கிருபாசாரியாரை வணங்கி அவர் ஆசியுடன் மூன்று அசுவமேத யாகங்கள் செய்தான். ஒருசமயம் திக் விஜயம் செய்து வரும்போது ஓரிடத்தில் மூன்று கால்களை இழந்து ஒற்றைக் காலில் நிற்கும் ரிஷபத்தையும் கண்ணீர் விட்டுக் கெண்டிருக்கும் பசுவையும் பார்த்தான். ராஜலக்ஷங்களோடு கூடிய மனிதன் ஒருவன் அவற்றை அடிப்பதையும் கண்டான். பார்த்த மாத்திரத்திலேயே அவன் கலிபுருஷன் என்பதை பரீக்ஷித்து அறிந்து கொண்டான். பெரும் சீற்றத்துடன் கையில் அம்பை எடுத்தான்.

 

           ஒற்றைக் காலுடன் நின்ற ரிஷபம் தர்மதேவதையாகும். கிருதயுகத்தில் அதற்கு நான்கு கால்கள், திரேதயுகத்தில் தர்மம் குறையவே ஒருகாலை இழந்து மூன்று கால்களை உடையதாக இருந்தது. துவாபர யுகத்தில் மற்றொரு காலையும் இழந்தது. கலியுகத்தில் கலிபுருஷனிடம் அதர்மம் மிஞ்சி இருக்கவே மேலும் ஒருகாலை இழந்து ஒற்றைக் காலுடன் நின்றது. கலிபுருஷன் ஆதிக்கத்தைக் கண்டு மனம் பொறாத பூமி தேவதையான பசு கண்ணீர் விட்டு அழுதது. பசுவாகிய பூமிதேவியைப் பார்த்து தர்ம தேவதை கேட்டது.

    "ஹே பூமிதேவி, உன் உடல் வாடியிருப்பதன் காரணம் என்ன? முகம் சோகம் நிரம்பியதாக இருக்கிறதே. கலியினுடைய ஆதிக்கத்தால் கால்களை இழந்து ஒற்றைக் காலுடன் நிற்கும் நீ கர்மாக்கள் குறைந்து விட்டதால் தேவர்களுக்குரிய அவிர்பாகம் கிடைக்கவில்லையே என அவர்களைப் பார்த்து வருத்தப்படுகின்றாயா? இனி நாட்டில் பிதா-குழந்தைகளையும் கணவன்-மனைவியையும் ரட்ஷிக்கப் போவதில்லை என்பதைக் குறித்துச் சங்கடப்படுகின்றாயா? உனக்கேற்பட்ட சுமையைக் குறைக்க அவதரித்த பகவான் தம் வேலையை முடித்துக் கொண்டு புறப்படுகையில் உன்னை விட்டு விட்டுப் போய்விட்டாரே என வருத்தப்படுகிறாயா?"

 தர்மத்தின் கேள்விகளுக்கு பசு கண்ணீர் விட்டபடி பதில் அளித்தது.

 

    "தர்ம பிரபோ, நீ சொல்வது அனைத்தும் உண்மையே, எந்த மக்களுக்கு நன்மையை அளிக்க நீ இருக்கின்றாயோ அந்த மனிதர்களே உன்னை நினைக்காது இருப்பதை எண்ணும்போது என் சோகம் அளவிட முடியாததாக ஆகின்றது". இவ்வாறு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது பரீக்ஷித்து அங்கு வந்து சேர்ந்தான். கையிலெடுத்த அம்பை வில்லிலே பூட்டியபடி, "ஹே மானுடா, நீ யார்? என் நாட்டிலே ஒரு காரணமுமின்றி பிறர் ஹிம்சைக்கு உள்ளாவதை நான் அனுமதிக்கமாட்டேன். வைகுண்ட நாதனான ஸ்ரீ கிருஷ்ணரும் காண்டீபத்தை உடைய அர்ஜுனனும் இல்லையென்ற காரணத்தால் எளியாரை இம்சிக்கத் தொடங்குகிறாயா? உன் தோற்றமோ அரசனைப்போல இருக்கிறது. உன் செய்கையோ கீழ்த்தரமாக இருக்கிறது. நீ யார்? என்பதைச் சொல். ஒரே காலில் மட்டும் நிற்கும் ரிஷபமே நீ யார்? என்னைச் சோதிக்க வேண்டிய மாய உருவெடுத்து வந்துள்ள தேவர்களா நீங்கள்? கோபாலன் இருந்தவரை எந்தப் பிராணியும் கண்ணீர் விட்டதில்லேயே. பசுவே உன் கண்ணீர் பெருகக் காரணம் என்ன? உங்களை அந்த மானிடனிடமிருந்து நான் காப்பாற்றுவேன். அதைரியம் வேண்டாம். எந்த அரசனுடைய நாட்டில் தர்ம விரோதிகளால் பிரஜைகள் துன்பப்படுகின்றனரோ அவனுடைய புகழும், ஐசுவரியமும், ஆயுளும் நசிந்து விடுகின்றன. துன்பப்படுகின்ற குடிகளின் கஷ்டத்தைப் போக்குவதுதான் அரசனுடைய தர்மமாகும்"  என்று கர்ஜித்தான் பரீக்ஷித்து.

         அப்போது தர்ம தேவதை அரசனைப் பார்த்து, "ஹே ராஜன், நல்ல வார்த்ததைகளைத்தான் கூறினாய். பாண்டுவின் வம்சத்தில் வந்த நீ, உன் முன்னோர்களைப் போன்றே துன்பத்தில் சிக்கியுள்ள பிராணிகளுக்கு அபயம் தரும் வார்த்தைகளைச் சொன்னாய். நாங்களோ எந்த புருஷனிடமிருந்து எங்களுக்குத் துன்பம் உண்டாக்கக் கூடிய காரணங்கள் ஏற்பட்டனவோ அந்தப் புருஷனை அறியோம். நீயே உனது புத்தியால் அறிந்துகொள்" என்று சொல்லிற்று. பரீக்ஷித்து, ரிஷபமாகிற தர்ம தேவதையின் வார்த்தைகளைக் கேட்டுச் சிறிது யோசித்தவனாய் அதைப் பார்த்துச் சொன்னான்.

          "ஹே தர்மபுருஷா, கெடுதல் செய்தவனை அறிந்திருந்த போதிலும் அதனை நேரில் குறிப்பிடலாகாது என்ற தர்மத்தின்படி அமைந்திருக்கிறது உன் பேச்சு. ஆகவே ரிஷப ரூபத்தில் வந்திருக்கும் தர்மதேவதையாக உன்னை எண்ணுகிறேன். தவம், சௌசம், தயை, ஸத்யம் இந்நான்கும் தர்மத்தின் பாதங்கள் எனச் சொல்லப்பட்டுள்ளன. கர்வம், ஸ்திரீலோலம், மதம் ஆகிய அதர்ம அம்சங்களினால் உன் மூன்று பாதங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது ஸத்யமாகிய ஒரே பாதம் தான் உன்னிடம் எஞ்சியிருக்கிறது. அதையும் கலியில் பொய் எனப்படும் அதர்மம் அழிக்க விரும்புகிறது. அதேபோல இங்கே நிற்கும் பசுவைப் பூமாதேவி, அவர் வைகுந்தம் ஏகிவிட்டதால் துயரம் கொண்டு இனி பிராமண பக்தியற்றவர்களும் சத்திரியர் போல வேஷம் போடுபவர்களான கீழோரும் உன்னை அனுபவிக்கப் போகின்றனரே என்று கண்ணீர் விடுவதாகவே என் புத்திக்கு எட்டுகிறது" என்றான் அரசன்.

    பின்னர் அவர்கள் பக்கத்தில் நிற்கும் மானிடனைப் பார்த்து,  "அடே மானிடா, உன் வேஷம் வெளிப்பட்டுவிட்டது. இத்தனைக்கும் காரணமான நீ வேறு யாருமில்லை. அதர்மத்தை மித்திரனாகக் கொண்ட கலிபுருஷனே! உன்னை இப்போதே ஒழித்து விடுகிறேன்" என்று கூறியவனாய் அம்பை வில்லில் பூட்டி, நாணை இழுத்தான். அரசன் பிரயோகிக்க இருக்கும் அஸ்திரத்திலிருந்து தப்ப முடியாதென்பதைக் கண்ட அம்மனிதன் வெலவெலத்துப் போய் வாய் குழறத் தன்னுடைய உண்மையான வடிவை எடுத்துக் கொண்டு, "ஹே, ராஜன், அபயம் அருள வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு நெடுஞ்சான் கிடையாகத் தரையில் விழுந்தான். துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனத்தில் பலராலும் புகழப்பட்ட பரீக்ஷித்துராஜன், தன் கால்களைச் சரணம் என்று பிடித்தவனைக் கொல்வது தர்மத்துக்கு விரோதம் என்று அறியமாட்டானா! வில்லிலே பூட்டிய அம்பைக் கையிலெடுத்துக்கொண்டு, அர்ஜுனனுடைய கீர்த்தியைப் பெருமையுடன் தாங்கி வரும் என்னிடம் அபயம் எனச் சரணடைந்தவனுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. இதைத் தெரிந்துகொள். பயப்பட வேண்டாம். ஹே கலிபுருஷா, ஸத்யத்தை நடத்திவரும் என் நாட்டில் அதர்மத்திற்கு இடமில்லை. ஆகவே என் நாட்டை விட்டு உடனே வெளியேறிவிடு. என் ராஜ்ஜியத்தில் உன்னால் மக்கள் துன்பப்படுவதை நான் சகித்துக் கொண்டிருக்க முடியாது" என்றான்.

          கலிபுருஷன் உடல் நடுங்க எழுந்தவன், இரு கைகளையும் கூப்பியவனாய், "ஹே ராஜன், இந்த நாட்டை விட்டு வெளியேறி வேறிடத்தில் சென்று வசிக்குமாறு உத்தரவிட்டீர்கள். நான் எங்கு சென்று வசிப்பேன்? இந்தப் பூமண்டலம் முழுமையும் உம்முடைய ஆக்ஜைக்குள் கட்டுப்பட்டதன்றோ! உம்முடையதல்லாது ஒரு ஊசி குத்தும் இடம் கூடக் கிடையாதே. உம்மையே சரன் என்று பணித்து விட்ட எனக்குப் போக்கிடம் இல்லாது போய்விட்டது. நீங்களே ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் காட்டுங்கள். அங்கு சென்று நான் வசிப்பேன்" என்றான். பரீக்ஷித்தும் அவன் கோரிக்கைக்கு இணங்க வேண்டியதாயிற்று. "ஹே கலிபுருஷா, நீ வசிக்கக் கூடிய இடங்களை நான் குறிப்பிடுகிறேன், அந்த இடங்களில் நீ தாராளமாக வசிக்கலாம். சூதாட்டம், மது அருந்தும் இடம், ஸ்திரீகளிடம் அதிக ஆசை கொண்டு அவர்களுக்கு சேவை புரியும் இடம், பிராணிவதை நடக்கும் இடம் ஆகிய இந் நான்கு விதமான அதர்மம் நடக்கும் இடங்களை உனக்களித்தேன்" என்றான்.

       கலிபுருஷன் மீண்டும் அரசனை வணங்கி,  "ஹே ராஜன், என் விஷயத்தில் தாங்கள் தயை காட்டினீர்கள். தாங்கள் குறிப்பிட்ட இந் நான்கும் எந்த ஒன்றிலேயே அடங்குகிறதோ அந்த ஸ்தானத்தை எனக்குத் தாருங்கள்" என்று வேண்டினான். அரசனும் ஸ்வர்ணத்தை (பொன்) கலிபுருஷனுக்கு ஸ்தானமாக அளித்தான். ஆகவே தர்ம சீலர்கள் பொய் சொல்லுதல், கர்வம் கொள்ளுதல், ஸ்திரீகளிடம் ஆசை, பிறரை ஹிம்சித்தல், ஸ்வர்ணம் முதலான ஆபரணங்கள் ஆகியவற்றில் பிரியம் இவ்வனைத்தையும் ஒதுக்கி வாழவேண்டும் என்று சொல்லப்பட்டது. கலிபுருஷன் அரசனை நமஸ்கரித்து அவனிடம் விடைபெற்றுச்  சென்றான். அதன் பின்னர் பரீக்ஷித்து, தர்மதேவதையின் அழந்த மூன்று பாதங்களான தவம், சௌசம், தயை ஆகியவற்றை திரும்பவும் அடையச் செய்து விடை கொடுத்து அனுப்பினான். பூமி தேவியும் அரசனைப் பலவாறு புகழ்ந்து கொண்டாடித் தன் இருப்பிடம் திரும்பினாள்.

 

PostHeaderIcon ஆலிலை ஸ்ரீகிருஷ்ணரும் அவருடைய பக்தர்களும்

         ஆலிலை மேல் துயிலும் ஸ்ரீகண்ணன்தான் இவ்வுலகத்தை ஆட்டுவிக்கிறார். நம் இதயம் போன்ற வடிவுடையதுதான் ஆலிலை. ரிக், யஜுர், சாமம், அதர்வணம் போன்ற நான்கு வேதங்களும் ஆலிலையில் நான்கு பகுதிகளாகும். ஆழ்வார்களின் ஆலிலை போன்ற இதயத்தில் ஸ்ரீ பரந்தாமன் எழுந்தருளியிருக்கிறார். ஆலிலை மேல்  அமர்ந்துள்ள ஸ்ரீவாஸுதேவன் இல்லாமல் இப்பேருலகில் ஒரு அணுவும் அசையாது என்பது பேருண்மையாகும். ஆலிலைமேல் உறங்கும் ஸ்ரீகோபாலன் விரும்புவது ஆழ்வார்களின் அன்பையும் பக்தியையுமேயாகும். ஆலிலைக் கோவிந்தன் நடு உச்சியில் அடர்ந்து ஓங்கி வளர்ந்திருக்கும் மர நிழலில் பசுக்களை இளைப்பாறச் செய்து, தன் புல்லாங்குழலில் இனிமையாக இசைத்து, பசுக்களை மகிழ்விப்பாராம். தானும் தன் களைப்பைப் போக்கிக் கொள்வாராம். ஸ்ரீ மாதவனான அந்தப் பரம்பொருளே ஏகப் பரப்பிரம்மம். மனிதர்கள் மற்றும் உயிருள்ள ஜீவராசிகளின் உறைவிடமாக உள்ளவனே ஸ்ரீகேசவன். ஆலிலையையே பரந்தாமனுக்கு, ஆதி சேஷ வாகனமாகும். ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் வாக்கே ஸ்ரீமத் பகவத் கீதையாகும். ஸ்ரீகிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது தன் கால் கட்டை விரலைச் சூப்புவது வழக்கமாம். தேவர்கள், தவசிரேஷ்டர்கள், முனிவர்கள், தவசிகள் என்று அனைவரும் ஸ்ரீகிருஷ்ணரின் பாதார விந்தங்களில் பணிந்து வணங்குகிறார்கள். ஸ்ரீ விஷ்ணுவின் பாதக் கமலத்தைத் தரிசித்து மகிழ்கிறார்கள்.

    ஸ்ரீ கிருஷ்ணர் பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் போது, அவை ஸ்ரீகண்ணனின் கால்களையும், பாதங்களையும் நக்கிச் சுவைத்து இன்புறுமாம். அதனால், அப்படி தன் கால் கட்டை விரலில் என்ன அமிர்தம் போன்ற ருசி, தேன் போன்ற சுவை இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவே தான் ஆலிலையில் துயிலும் குழந்தையான ஸ்ரீ கண்ணனும், தன் கால் கட்டை விரலைச் சூப்புகிறாரோ என்று ஆழ்வார்களுக்கு நினைக்கத் தோன்றியிருக்கும். ஸ்ரீவாஸுதேவன் தன் பாதவிரலைச் சூப்புவது எதனால் என்றால், பூலோகவாசிகள் அதாவது அவருடைய பக்தர்களின் மனதைக் கவர்ந்து கொள்ளவும், அவர்களின் அன்பையும், பக்தியையும் பெறுவதற்கே என்று தத்துவ ஞானிகளான தவசிரேஷ்டர்கள் கூறுவார்கள்.

    வாமனவதாரத்தில் ஸ்ரீதிருமாலின் புனிதமான திருவடிகள், அவர் மூவடி அளந்தபோது, சத்தியலோகம் வரை வளர்ந்தோம். ஸ்ரீபிரம்மாவும் பெருமாளின் திருவடிகளுக்கு திருமஞ்சனம் செய்து பூஜை செய்தாராம். ஸ்ரீ பரந்தாமனின் இடது பாதக் கட்டை விரலிலிருந்து அவருடைய மெய் பக்தர்களின் பாவங்களைப் போக்கும் ஸ்ரீபாத தீர்த்தமாக மிகப் புனிதமான கங்கை இப்பூமிக்கு வந்ததாம். இந்நிகழ்ச்சி பகவான் திருவருளேயாகும்.

    இந்த பெருமாளின் கடலடித் தீர்த்தமே வைணவர் கோயில்களில் அமிர்தமாக பக்தர்களுக்குத் தீர்த்தப் பிரசாதமாக திருத்துழாய் சேர்த்து வழங்கப்படுகிறது. அதையடுத்து உடனே ஸ்ரீ விஷ்ணுவின் பாதாரவிந்தங்களின் அடியில், பெருமாளின் பாதுகையின் சம்பந்தத்தினால் என்றென்றும், ஒரு க்ஷண நேரங்கூடப் பிரியாமலிருக்கும் அற்புதத்தை பக்தர்களுக்கு எடுத்துரைக்கவே சடாரியும் சாத்தப்படுகிறதாம். பரதாழ்வாரால், அயோத்திக்குக் கொண்டு வரப்பட்ட, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு இராமப் பாதுகைகள் அயோத்தி நகரைப் பதினான்கு வருடங்கள் ஆட்சி செய்தனவாம். ஆகையினால் ஸ்ரீதிருமாலின் பாதுகைகளும் பகவான் பாற்கடல்மேல் துயில் கொள்ளும் ஆதிசேஷனும், பன்னிரு ஆழ்வார்களும் ஒரே தத்துவமாகி ஆலிலையாக ஆதி காலந்தொட்டே என்றென்றும் நமக்கு அருள்மழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. இவற்றிலிருந்து, ஆலிலைமேல் துயின்று புவனம் அனைத்தையுமே ஆட்டுவிக்கும் சிறு குழந்தை கண்ணனின் வைபவம் பக்தர்களால் அளவிட்டுக் கூறிட இயலாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் நமக்குத் தெளிவாக விளங்குகிறதல்லவா?

 

PostHeaderIcon பஜகோவிந்தம் பிறந்த வரலாறு

 

உலகத்தில் பல அரிய நிகழ்வுகள் தோன்றிய சூழலைச் சிந்தித்தால் மிகவும் விசித்திரமாக இருக்கும். புவிஈர்ப்புத் தத்து வத்தைக் கண்டுபிடித்த சூழலும், ஆர்க்கி மிடிக்ஸ் தத்துவம் உருவான வரலாறும் நாம் அறிந்ததே. ஆனால், நம்மில் பலருக்கு பஜகோவிந்தம் உருவான வரலாறு தெரிந்திருக் குமா என்பது சந்தேகமே. தெரியாதவர்களுக்கு சற்றே விளக்குவோம்.

ராய்ச்சியாளர்களின் ஏகோபித்த கருத்தின்படி ஆதிசங்கரரின் காலம் கி.பி. 788-820. கேரள மாநிலத்தில் உள்ள காலடியில் பிறந்தார் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றனர். பகவான் புத்தரின் (கி.மு.6-ஆம் நூற்றாண்டு) காலத்திற் குப் பிறகு தோன்றிய மிகச்சிறந்த சிந்தனையாளரும் இவர்தான். இவை அனைத்துக்குமே முத்தாய்ப்பான செய்தி- இவரொரு தமிழர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட- வடமொழியின் எல்லை கண்ட மகாகவி இவர். இவ்வளவு உறுதியாகச் சொல்வதற்குக் காரணம் 8, 9-ஆம் நூற்றாண்டில் மலையாள மொழி தோன்றவே இல்லை. அதன் முதல் இலக்கியமான ராமாயணமே எழுத்தச்சனால் 10-ஆம் நூற்றாண்டில் உண்டானது தான்.

கங்கை நதிக்கரையில் காசி மாநகரில் பஜகோவிந்தம் உருவாகக் காரணமாக இருந்த நிகழ்ச்சி பூத்த காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கமாக இருக்கலாம். காசியில் ஆதிசங்கரர் சர்வக்ஞபீடம் ஏறிய பின்புகூட இருக்கலாம். தனது 32 வயதிற்குள் எண்ணற்ற இலக்கியங்கள் மற்றும் கவிப்பெருக்கால் தத்துவ உலகை பிரமிக்கச் செய்து, அத்வைத தத்துவத்தை ஸ்தாபித்து, மும்முறைக்கும் மேலாக அகண்ட பாரத தேசத்தை தனது திருப்பாதங்களால் புனிதப்படுத்திய ஞானப் பிரவாகமல்லவா அந்த மாமேதை!

ஒருநாள் வைகறைப் பொழுது... விரிகடலும் தோற்கும் வண்ணம் தெளிநீர்ப் பெருக்கால் காட்சியளித்துக் கொண்டிருந்தது கருணையே வடிவான கங்கை. அப்போது கிழக்கே  உதித்து வரும் செம்பருதியைப்போல- மனித வடிவம் கொண்டு வந்த தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப்போல ஆதிசங்கரர் தனது நான்கு சீடர்களும் நிழலெனத் தொடர கம்பீர மாய் நடந்து வந்து கொண்டிருந்தார்.

ஒருபுறம் வேத கோஷங்கள், நாத கீதங்கள், சேதமிலா நாதனைப் பற்றி வந்தனைகள், வாழ்த்தொலிகள், சொற்பொழிவுகள்; மற்றொரு புறம் தியாகத்தின் வெளியீடான யாகங்கள், உயிர்ப்பலியினை உதறித் தள்ளி இயற்றப்பட்ட ஞான வேள்விகள். பகவத் கீதையில் கிருஷ்ணனும் ஞான வேள்வியைத்தானே ஏற்றிப் போற்றுகிறான். மற்றொரு புறத்தே தாடியும் சடாமுடியுமாகக் கூத்தடித்த கபட சன்னியாசிகள், வேடதாரிகள். (இதை சங்கரரே பின்பு "ஜடிலே முன்டி லுஞ்சித கேஸ, காஷாயாம்பர' எனச் சாடினார்.) இதையெல்லாம் கண்டு சிந்தனையில் அசை போட்டுக் கொண்டே வந்தவர் ஒரு காட்சியைக் கண்டதும் பிரமித்து விட்டார்.

ஒரு மூலையில் வயதான கிழவன் கால்கள் தள்ளாட, கைக்கோலுடன் மல்லாடிக் கொண்டே ஒரு சுவடியின் சில பகுதிகளை மனப்பாடம் செய்வதில் திண்டாடிக் கொண்டிருந்தான். இன்றைக்கோ நாளைக்கோ காலனுக்கு விருந்தாகப் போகிறவன் கோலத்தைக் கண்டு துணுக்குற்ற சங்கரர் மெல்ல அவன்  அருகில் சென்றார். கிழவனும் சற்று உரக்கவேதான் படித்துக் கொண்டிருந்தான். மனப்பாடம் செய்து கொண்டிருந்தது, வடமொழி இலக்கணத்தில் வரும் சூத்திரத்தை. சங்கரர் முகத்தில் புன்னகை மலர்ந்தது. என்ன உலகம்! மோகத்தின் வேகத்தில் சாகும் உலகம். பெண் மேலே- பொன் மேலே- வெற்றுக் கல்வியின் மேலே மோகம் கொண்டு அழிகிறதே! பிறப்பறுக்கும் பெம்மானின் திருவருளைப் பெறுதலைவிட்டு, பந்தத்தின் மூலத்தை- பிறப்பிற்குக் காரணமானதை நாடுகிறதே... இந்த மூட மக்களுக்குப் போதித்துக் கரையேற்ற வேண்டாமா எனச் சிந்தித்து, "மோஹ முத்கரம்' (மோகத்தைத் தகர்க்கும் சம்மட்டி) என்ற இந்த ரத்தின மாலையைத் தொடுத்தார். ஆனால் இதன்  முதல் மலர், "பஜகோவிந்தம்' என்று தொடங்குவதால் அதற்கும் "பஜகோவிந்தம்' என்ற பெயரே நிலைப்பதாயிற்று.

அப்பாடல் இதோ!

"பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

கோவிந்தம் பஜ மூடமதே

ஸம்ப்ரஸ்தே சந்நிஹிதே காலே

நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே.'

இதைத் தமிழில்,

"மாயனை எண்ணின் மாயம் மாயும்

மாலை நினைவாய் அலை மனமே

நேயனை யன்றி மாயுங் காலம்

யாரும் வாரார் உளங்கொள்வாய்'

எனச் சொல்லலாம்.

"ஓ மூடனே! இறைவனுக்கு எப்பொழுதும் மனத்தாலும் வாக்காலும் உடலாலும் பணிபுரிவதை விட்டு, "டுக்குங்கரணே' போன்ற இலக்கணப் பாடல்களைப் பயில்கிறாயே. இதனால் பயனுண்டா? இறக்கும் காலத்தே சாகும் கல்வி உடன்வருமா? சாகா கல்வியைக் கற்றால்தானே விடுதலை கிடைக்கும்? ஆகவே மனது, சொல், உடல் அனைத்தும் இறைவன்பால் சாரட்டும். அதற்கு ஆவண செய்' என்பது இதன் பொருளாகும்.

பஜகோவிந்தம் மொத்தம் 31 கவிமலர்களில் கோக்கப் பெற்றது. இந்த ரத்தின மாலை கிடைக்கக் காரணமாக இருந்த அம் முதியவருக்கும் நம் வணக்கங்களைச் சமர்ப்பிப்போமே!

 

நன்றி: நக்கீரன்

 

ஸ்ரீல பிரபுபாதா - ஒரு சகாப்தம் - காணொளி

மேலும் வாசிக்க...

 

<< தொடக்கம் < முன் 21 22 23 24 அடுத்தது > முடிவு >>

பக்கம் 23 - மொத்தம் 24 இல்

தேடுக...
இணைப்பில்
எங்களிடம் 48 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
பயனர் படிவம்